இக்கோயிலை 'சகாதேவன் கோயில்' என்று அழைக்கின்றனர். சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதனின் நந்தவனத்தில் பூத்த பூக்களை, தேவர்கள் யாருக்கும் தெரியாமல் பறித்து திருமாலுக்கு சூட்டி வணங்கி வந்தனர். பூக்கள் காணாமல் போவதைக் கண்ட மன்னன், செய்தி தெரிந்து தேவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டான். தேவலோகம் செல்ல முடியாமல் தவித்த தேவர்கள், தாங்கள் மீண்டும் செல்ல வேண்டுமானால் ஏகாதசி விரதம் இருந்து ருக்மாங்கதன் பெற்ற பயனை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டினர். இதைக் கேட்ட ருக்மாங்கதன் இத்தலத்து பெருமாள் முன்னிலையில் தேவர்களுக்கு தனது ஏகாதசி விரத புண்ணியத்தை அவர்களுக்கு அளித்து தேவர்களுக்கு அவர்கள் மீண்டும் விண்ணுலகம் செல்ல உதவினான். இவையனைத்தும் ஒரு கடிகையில் (கடிகை - 1 நாழிகை) நடைபெற்றதால் இத்தலம் 'திருக்கடித்தானம்' (ஒரு கடிகையில் தானம்) என்ற அழைக்கப்படுகிறது.
மூலவர் அற்புத நாராயணன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இந்த மூர்த்தியை பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான சகாதேவன் ஜீர்ணோத்தாரணம் செய்ததால் 'சகாதேவ பிரதிஷ்டை' என்று கூறுவர். தாயாருக்கு கற்பகவல்லி என்பது திருநாமம். பகவான் ருக்மாங்கதனுக்கு பிரத்யக்ஷம். இவரை வழிபட்டால் 1 கடிகை (நாழிகை) நேரத்திற்குள் பெருமாளின் திருவருள் கிட்டும் என்பது ஐதீகம்.
கோயிலுக்கு முன்னால் ஒரு மனித உடம்பின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை கேரள அரசன் ஒருவன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது கோயில் மூடப்பட்டிருந்தது. ஆனால் காவலாளி பணம் பெற்றுக் கொண்டு கதவைத் திறந்து விட்டான். அதை நினைவுபடுத்தும்விதமாக அவனது உடலைப் போன்ற சிலையை கோயில்முன் சிலையாக வடித்துள்ளனர்.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|